வேதசர்மா என்ற அந்தணர் ஒருவர் சுவாமிக்கு நிவேதனம் செய்வதற்கு நெல்லை உலர வைத்திருந்தார். அப்போது மழை பெய்தது. மழை நீரில் இருந்து நெல்லைக் காப்பதற்கு அந்தணர் இறைவனை வேண்ட சிவபெருமான் வேலி கட்டி நெல்மணிகளைக் காத்தார். அதனால் இத்தலத்திற்கு 'திருநெல்வேலி' என்ற பெயர் ஏற்பட்டது. புராண காலத்தில் இத்தலம் 'வேணுவனம்' என்று அழைக்கப்பட்டது. தாமிரபரணி நதிக்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.
மூலவர் 'நெல்லையப்பர்', 'வேணுவனநாதர்' என்னும் திருநாமங்களுடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். இறைவன் மூங்கிலில் தோன்றிய காரணத்தால் வேணுவனநாதர் என்ற பெயர் பெற்றதாகக் கூறுவர். அம்பாள் 'காந்திமதியம்மை' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
நடராஜருக்கு உரிய பஞ்ச சபைகளுள் ஒன்றான தாமிர சபை உள்ள தலம். இக்கோயிலில் நடராஜர் சுவரில் சித்திர வடிவமாக உள்ளார். தாமிர சபையின் மேற்பகுதி, சிதம்பரம் பொற்சபை போன்ற வடிவில், தாமிரத்தால் ஆன கூரை வேயப்பட்டு உள்ளது.
அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் இத்தலம் காந்தி பீடமாக விளங்குகிறது.
திருமால், பிரம்மா, அகத்தியர் ஆகியோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|